என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை நகர சபை கூட்டத்தில் 134 தீர்மானம் நிறைவேற்றம்
    X

    திருவண்ணாமலை நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை நகர சபை கூட்டத்தில் 134 தீர்மானம் நிறைவேற்றம்

    • பஸ் நிலையத்தில் பயணிகள் அமர நிழற்குடை
    • அடிப்படை வசதிகள் செய்துதர கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நகரமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வைத்தார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.

    நகர சபை கூட்டம்

    கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி திருவண்ணாமலை நகரில் உள்ள 15 கழிப்பிடங்களை இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அந்த 15 கட்டண கழிப்பிடங்களை வருகிற 1-ந் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் செய்வது.

    134 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    திருவண்ணாமலை நகராட்சி மத்திய பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்தில் பயணிகள் அமர நிழற்குடை அமைத்தல் மற்றும் ஆவின் பாலகம் முன்பு கொண்டும் குழியுமாக இடத்தினை சமன்படுத்துவது, திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள அனைத்து தெரு விளக்குகளையும் பராமரிப்பதற்கு தேவையான அனைத்து மின்சாதன பொருட்கள் கொள்முதல் செய்வது,

    திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள முற்றிலும் பழுதடைந்த மினி பவர் பம்புகள் சரி செய்திட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் புதிய மோட்டார்கள் பொருத்துவது மட்டுமின்றி கால்வாய்கள் சீரமைத்தால் சாலை அமைத்தல் என்பன உள்ளிட்ட 134 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முன்னதாக கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    திருவண்ணாமலை திருமலை நகரில் தரமற்ற முறையில் கால்வாய் அமைத்ததால் அது சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. எனவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததார் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவண்ணாமலை நகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கு வெளி நபர்களுக்கு டெண்டர் வழங்குவதை விட நகராட்சி கவுன்சிலர்களில் தகுதியான நபர்களுக்கு டெண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருவண்ணாமலை பேகோபுரம் பகுதியில் இருந்து பச்சையம்மன் கோவில் வழியாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    அந்தப் பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதுகுறித்து ஆய்வு செய்து விரைந்து சாலை அமைத்து தர வேண்டும். திருவண்ணாமலை ஈசானிய லிங்கம் மற்றும் எமலிங்கம் அருகில் உள்ள எரிமேடை மோசமான நிலையில் உள்ளது அதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

    அங்கன் வாடி மையம்

    திருவண்ணாமலை 30 -வது வார்டில் ஒரு பகுதியில் புதிதாக சாலைகள் கால்வாய்கள் அமைத்து தரப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் போதிய அளவு சாலை, கால்வாய் வசதி இல்லாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    எனவே இது குறித்து ஆய்வு செய்து சாலை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும். 20-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பேசினர் கூட்டத்தில் நகராட்சி பொறியாளர்,

    உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் கவுன்சிலர் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×