என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துப்பட்டு, கண்ணமங்கலம், ஆரணி, போளூர், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள கோவில்களில் மகாதீப விழா
- வந்தவாசி வெண்குன்றம் கோவிலில் 1,440 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த இஞ்சிமேடு, பெரியமலை திருமணிச்சேறை உடையார், சிவன் கோவிலில் கார்த்திகை மாத மகா தீப திருவிழா நடந்தது.
பின்னர் மாலையில் பெரியமலை உச்சியில்108 நெய் மூலம் பெரிய கொப்பரை செய்து வைத்து. சிவயோகி சித்தர் பெருமாள் சுவாமிகள், திருமணி சேறைஉடையார் சிவலிங்கத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து பெரிய அகல் விளக்கை மேளதாளம் முழங்க கோவில் உச்சியில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சொல்வாக்கு சித்தர் லலிதாம்பிகை அம்மாள் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், கயிறு, ஆகியவற்றை வழங்கி அருள் ஆசி வழங்கினார்.
நாதஸ்வர கலைஞர்களால் இன்னிசை கச்சேரி நடந்தது. பின்னர் பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நேற்று 8-ம் ஆண்டாக கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது.
அர்த்தநாரீஸ்வரர் முன்னிலையில் 45 அடி உயர தீப கம்பத்தில் மகாதீபத்தை விழா குழுத்தலைவர் சரவணன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஆரணி ஜோதிடர் குமரேசன், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி திருமால், ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணிஆனந்தன், துணை தலைவர் சாலம்மாள், அன்பரசு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழு தலைவர் சிவ சரவணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை தீப விழா சிறப்பாக நடைபெற்றது. மாலை கோயில் முன்பு 108 அடி உயர சிவலிங்கம் மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கார்த்திகை தீபத்தையொட்டி நேற்று அனைத்து கோவில்க ளிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலில் கசுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா அலங் காரம் செய்து தீபாராதத்துடன் நடைபெற்றது. மாலையில் கோவில் மேல்தளத்தில் பெரிய செப்பு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதேபோன்று கோட்டை கயிலாயநாதர் கோவில், கோட்டை வேம்புலி அம்மன் கோவில், அரியாத்தம்மன் கோவில், பூமிநாதர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், பையூர் - சேவூர் பகுதியில் உள்ள விருப்பாச்சீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பெரிய கொப்பரைகள், பெரிய அகண்டத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து வீடுகளிலும், கடை, அலுவலகம், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது.
வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயர மலை உச்சியில் மாலை 6 மணி அளவில் தவளகிரி ஈஸ்வரர் கோவிலின் கோபுரத்தின் மேல் வைக்கப்பட்ட அகண்டத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்பட்டபோது பக்தர்கள், 'அரோகரா', 'அரோகரா' என பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தாசில்தார் முருகானந்தம் மேற்பார்வை யில் பாதுகாப்பு ஏற் பாடுகளை வந்தவாசி துணை சூப்பிரண்டு கார்த்திக் தலை மையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு போளூரில் சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள நரசிம்ம பெருமாள் மலை மீது மாலை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் போளூர் நற்குன்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் மலை மீதும் தீபம் ஏற்றப்பட்டது.
கலசபாக்கம் அடுத்த பருவதமலையில் 4 ஆயிரத்து 568 உயரத்தில் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி,வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தென்மகா தேவமங்கலம், அருணகிரி மங்கலம், கோவில்மாதிமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை தீபம் ஏற்றுவதற்காக கொப்பரைக்கு தீபாரா தனை செய்து மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு மாலை 6 மணிக்கு கொப்பரையில் நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றபட்டது. இதனை யொட்டி நூற்றுக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். பருவதமலை அடிவார பகுதியை சேர்ந்தவர்களும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்களும் மலை மீது ஏற்றிய தீபத்தை பார்த்து வணங்கி விட்டு தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.






