search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    102 வயது மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல்
    X

    திருவண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 102 வயதுடைய மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவித்த போது எடுத்த படம்.

    102 வயது மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல்

    • உலக மூத்தோர் தின விழாவை முன்னிட்டு நடந்தது
    • வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் ஆய்வு

    திருவண்ணாமலை:

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 102 வயதுடைய மூதாட்டிக்கு கலெக்டர் முருகேஷ் வாழ்த்து மடல் வழங்கி கவுரவித்தார்.

    உலக மூத்தோர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை கடந்த வாக்காளர்கள் நாட்டின் ஜனநாயகத்தினை வலுப்படுத்தும் விதமாக செயல்பட்டு, நமக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகின்றனர்.

    மேலும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு தனது நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் விதமாக இந்திய தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ்குமார் ஒவ்வொரு மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை அனுப்பியுள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயதினை அடைந்த வாக்காளர்களை கவுரவித்து நன்றி தெரிவித்திடும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் வசிக்கும் 102 வயதுடைய சுப்பராயன் என்பவரின் மனைவி கல்யாணியின் வீட்டிற்கு நேரில் சென்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வாழ்த்து மடலை வழங்கி பொன்னாடை போர்த்தி அவரை கவுரவப்படுத்தினார்.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 49 ஆயிரத்து 928 மூத்த வாக்காளர்களுக்கும் வாழ்த்து மடலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு தோறும் சென்று வழங்கி வருகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை -வேலூர் சாலையில் உள்ள இனாம்காரியந்தல் பெரிய ஏரி நீர்வரத்து கால்வாய் செல்லும் பகுதிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×