என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வாகனத்தை ஓட்டி பார்த்து கலெக்டர் ஆய்வு
- 439 பள்ளி வாகனங்கள் ேசாதனை செய்யப்பட்டது.
- குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் பஸ்கள், வேன்கள் ஆகிய வாகனங்கள் நேற்று மாவட்ட அளவிலான குழுவினரால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களில் உள்ள முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, இருக்கைகள், ஆபத்து காலத்தில் வெளியேறும் கதவு, கண்காணிப்பு கேமிரா, வாகனத்தில் படிகளின் உறுதி தன்மை போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தனியார் பள்ளி வேன் ஒன்றினை ஆய்வு செய்யும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ஓட்டி பார்த்தார். இதில் 439 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் 47 பள்ளி வாகனங்களில் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அக்குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறையினரால் பள்ளி வாகனங்களில் தீ பிடிக்கும் நிலை ஏற்பாடுமாயின் தீயினை கட்டுப்படுத்தப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மேலும் 108 ஆம்புலன்சு இயக்கும் பணியாளர்களால் பள்ளி வாகனங்கள் விபத்து ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய முதலுதவி குறித்த நடவடிக்கைகள் குறித்த செய்முறை செய்து காணப்பிக்கப்பட்டது.
ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, சுந்தரராஜன், முருகவேல், தாசில்தார் சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதில் பள்ளி வாகன ஓட்டுநர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் வாட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






