என் மலர்
உள்ளூர் செய்திகள்

செல்வராஜ் எம்.எல்.ஏ.,
பல்லடம் அரசு நிகழ்ச்சிகளில் செல்வராஜ் எம்.எல்.ஏ., பங்கேற்பதில் எந்த விதிமீறல்களும் இல்லை
- தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை உள்ளது.
- அரசு விழாக்களில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பல்லடம்:
பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல்.குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்குள் அரசு நிகழ்ச்சிகளை திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பது விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றார்.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், தமிழ்நாடு சட்டமன்ற சட்ட உரிமை குழு உறுப்பினராக உள்ளார். அவருக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உரிமை உள்ளது. இதற்கிடையே, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊராட்சி பொது நிதி மற்றும் தமிழ்நாடு அரசு நிதி ஆகியவற்றின் மூலம் நடைபெறும் மக்கள் நல திட்ட பணிகளுக்கு, எங்களது விருப்பத்தின் பேரில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு திருப்பூர் தெற்கு தொகுதியிலேயே ஏராளமான பணிகள் இருந்தும், எங்களது வேண்டுகோளுக்கிணங்கவே பல்லடம், பொங்கலூர் பகுதிகளில் நடைபெறும் விழாக்களுக்கு வருகிறார்.
இதில் எந்தவிதிமீறலும் இல்லை. ஏற்கனவே அரசு விழாக்களில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் கலந்து கொள்வதில் தவறில்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






