என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
    X

    திருவோடுடன் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. கவுன்சிலர் சசி ரேகா.

    தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    • தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.
    • நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    ராஜசேகரன்(திமுக): தமிழக மக்களின் விரும்பத்தின் பேரில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்): தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும்.

    கனகுமணி துரைக்கண்ணன்(அதிமுக): ராயர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் சரிவர ஏறுவதில்லை. அதனால் அப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அது வரை அண்ணா நகர், பனப்பாளையம் குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் பெற்று ராயர்பாளையம் பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். ராயர்பாளையம்,பனப்பாளையம் பகுதியில் உள்ள மினி உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

    ருக்மணி சேகர் ( திமுக):- தீர்மான பொருள் 2ல் நகராட்சி வார்டு எண் 16 பனப்பாளையம் பகுதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அது 8-வது வார்டு பகுதியில் உள்ளது. எந்தப் பகுதி, எந்த வார்டில் உள்ளது என்பது கூட நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா, பனப்பாளையம் பகுதிகளில், தெரு விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

    சசிரேகா(பா.ஜ.க): நகராட்சி சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பிச்சை எடுத்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணர்த்தவே மண் சட்டி எடுத்து வந்து இருப்பதாக கூறினார். அதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. ஆட்சியின் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று உரக்க சத்தமிட்டனர்.

    பாலகிருஷ்ணன்(திமுக): வரி இனங்கள் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வரி பணத்தை வரி வசூல் மையத்தில் செலுத்த பணியாளர்கள் சொல்லி வருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மென்மையான முறையில் கால அவகாசம் அளித்து வரி வசூல் செய்ய வேண்டும். இலக்கை எட்ட வரி வசூல் செய்யக் கூடாது.

    விநாயகம்(ஆணையாளர்): நகராட்சி பகுதியில் 62 சதம் சொத்து வரியும் மொத்தமாக 56 சதம் அனைத்து வரி இனங்களும் நிலுவையில் உள்ளது. அதனால் தான் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள சொத்துக்களை கிரையம், செட்டில்மெண்ட் மற்றும் இதர ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் போது சொத்து விபரத்தில் அதன் சொத்து வரி விதிப்பு எண்,குடிநீர் கட்டண இணைப்பு எண் மற்றும் காலியிட வரி விதிப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டும் நடப்பு தேதி முடிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத் தொகைகளை செலுத்தியுள்ளதை உறுதி செய்தும் அதற்கான ரசீது நகலுடன் பத்திர பதிவு மேற்கொள்ள பல்லடம் சார்பதிவாளரை கேட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×