search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து வசதிகளுடன்  அமராவதி அணை பூங்கா புதுப்பிக்கப்படுமா?சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம். 

    அனைத்து வசதிகளுடன் அமராவதி அணை பூங்கா புதுப்பிக்கப்படுமா?சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    • அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.
    • பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா மையமாக உடுமலை பகுதி அமைந்துள்ளது. அமராவதி அணை, திருமூர்த்திமலை மற்றும் வனப்பகுதிகள் என ஆண்டு தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மையமாக உள்ளது.

    ஆனால் அவர்களை ஈர்க்கும் வகையிலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும் மாவட்ட சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெயரளவிற்கு மட்டுமே சுற்றுலா மையமாக உள்ளது. இதில் அமராவதி சுற்றுலா மையத்தில் அமராவதி அணை மற்றும் பூங்கா, வனத்துறை முதலை பண்ணை, அமராவதி மலைத்தொடர்கள், படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.

    ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் அணையின் கரை பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பசுமையான பூங்கா அமைந்திருந்தது.இங்கு பல செயற்கை நீரூற்றுக்கள், அழகான நடை பாதை, புற்கள், வண்ணமயமான செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், வண்ண மின் விளக்குகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் அமைந்திருந்தன.

    அதே போல் அணையின் எதிர்புறம் 2 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள் தனித்தனி அறைகளிலும், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.மேலும் பூங்காவில், புலி, மான், காளை என சிலைகள் மற்றும் செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏராளமான அம்சங்கள் இருந்தன.

    சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்தாலும் அணை பூங்காவை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அணை பூங்கா முட் புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.உயிரியல் பூங்கா முழுவதும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள், அவற்றின் உபகரணங்கள் உடைந்தும், மின் விளக்குகள் திருடப்பட்டும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், மது அருந்தும் இடமாகவும் பூங்கா மாறியுள்ளது. அணை பூங்கா முழுவதும் அடர்ந்த வனப்பகுதி போல் மாறியுள்ளதால், பாம்புகள், காட்டுப்பன்றிகள் ஆக்கிரமித்து சுற்றுலா பயணியருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

    அதே போல் அவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.வாகனங்கள் பார்க்கிங் செய்ய ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களும் மாயமாகியுள்ளது.அணை மற்றும் அணைப்பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள், அணை பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கண்டு கொள்வதில்லை.அழகாக இருக்க வேண்டிய பூங்கா அலங்கோலமாக மாறியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    எனவே அமராவதி அணை பூங்காவை முழுமையாக புதுப்பிக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணை பூங்காவை புதுப்பிக்க, பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல முறை திட்ட அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு நிதி கோரி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அணை பூங்கா அடையாளத்தை இழந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சுற்றுலா தலமாக உள்ள நிலையில் இதனை மேம்படுத்த வேண்டும். தமிழகத்திலேயே சிறப்பு வாய்ந்த கள்ளி வகைகள் இருக்கும் வகையில், பாறை பூங்கா அமைக்கப்பட்டது.பல்வேறு வகையான மற்றும் வடிவங்களிலுள்ள கள்ளி செடிகள் இங்கு அமைக்கப்பட்டு பல வண்ண மலர்களுடன் அவற்றின் ரகங்கள், இயல்புகள் குறித்து அறிவிப்பு பலகைகள் என அழகாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தாவரங்கள் குறித்த அறிவு வளர்க்கும் அம்சமாகவும் இருந்தது. தற்போது கள்ளிப்பூங்காவும் பராமரிப்பின்றி, அடையாளத்தை இழந்து அடர்ந்த வனமாக மாறியுள்ளது.

    Next Story
    ×