என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தனிநபர் கழிப்பறை திட்டத்தின் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படுமா?
- கழிப்பறையின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
- ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொதுக்கழிப்பிடம் அமைத்துக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
மக்களின் அடிப்படை வசதிகளில் முக்கியமானவைகளாக இருப்பிடம் சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளன.இதில் சுகாதார வசதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுகாதாரம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த கடந்த 1999ல், மத்திய அரசு நிர்மல் பாரத் அபியான் திட்டத்தை அறிவித்தது.திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்ப்பது, கழிப்பறையின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
2014-ம் ஆண்டு பா.ஜ.க, ஆட்சிக்கு வந்த பின், தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், தனிநபர் கழிப்பறை திட்டம், மக்கள் நலன் சார்ந்த இயக்கமாகவே மாற்றப்பட்டது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 265 கிராம ஊராட்சிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் கிட்டதட்ட 100 சதவீதம் தனிநபர் கழிப்பறை அமைக்கப்பட்டு விட்டதாக ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் 95 சதவீத ஊராட்சிகளில் 80 சதவீத பயன்பாடு மட்டும் தான் உள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியத்திற்கு உட்பட்ட சில கிராமங்களில், தனிநபர் கழிப்பறை அமைக்கப்பட்டும், அவற்றை பயன்படுத்த மக்கள் முன்வருவதில்லை.இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொதுக்கழிப்பிடம் அமைத்துக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஊராட்சித்தலைவர்கள் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் கழிப்பறை அமைக்க பயனாளிகள் பெயரில் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், வீட்டின் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.ஆனால் தங்களது தாத்தா, தந்தை பெயரில் உள்ள வீடுகளில் வசிக்கும் பலர், பட்டாவில் தங்கள் பெயரை மாற்றாமல் உள்ளனர். இதனால், அவர்களுக்கு தனிநபர் கழிப்பறை அமைத்துக் கொடுப்பதில் சிக்கல் உள்ளது. இந்த நடைமுறை சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என்றனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், தனிநபர் கழிப்பறை திட்டம், சுகாதாரம் சார்ந்த விஷயத்தில், பெரும் பலனை தந்திருக்கிறது.அரசிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, எப்படியாவது இலக்கை எட்டத் துடிக்கும் அதிகாரிகள், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வுக்கு வழிகாட்டினால், திட்டத்தின் நோக்கம் 100சதவீதம் பலன் தரும்.அரசும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






