search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் திருவிழா -  ஜனவரி மாதம் 3 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம். 

    பொங்கல் திருவிழா - ஜனவரி மாதம் 3 நாட்கள் நடக்கிறது

    • ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    • தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து திருப்பூர் நொய்யல் கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா என்ற பெயரில் ஜனவரி 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாள் திருவிழாவாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.திருவிழா குறித்த இலச்சினை(லோகோ) வெளியிடப்பட்டது. மேயர் தினேஷ்குமார் இதை வெளியிட்டார். துணை மேயர் பாலசுப்ரமணியம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    பொங்கல் திருவிழாவுக்காக நொய்யல் கரையில் யுனிவர்சல் தியேட்டர் ரோடு சந்திப்பு பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.தை முதல் நாளான ஜனவரி 15-ந்தேதி சமத்துவ பொங்கல் வைத்து விழா துவங்குகிறது. தொடர்ந்து மண்ணின் புகழ் பாடும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    வள்ளி கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி-சிலம்பாட்டம் மற்றும் திருவண்ணாமலை பெரிய மேளம் ஆகியன முதல் நாள் நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ளன.16-ந் தேதி, கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், டொல்லு குனிதா (கர்நாடக மலையக கலை) நிகழ்ச்சி, நாட்டுப்புறப்பாடல்கள் இசை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    3-ம் நாள் நிகழ்ச்சியாக 3 ஆயிரம் குடும்பங்கள் இணைந்து புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைக்கும் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.17-ந் தேதி திருப்பூர் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புத்தாடை அணிந்து புதுப்பானையில் 3 ஆயிரம் பேர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. பொங்கல் பானைகளுக்கு நாதஸ்வரம், தவில் இசையுடன் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் தமிழர்களின் சிறப்பான காவடியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் என்னும் தமிழ் பேரொளி வழிபாடு, இதைப் பயின்று முதன் முதலாக அரங்கேற்றும் 250 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் தமிழ் கலாசாரம் பரப்பிய குழுவினர் 500 பேர் பங்கேற்கும் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி, ஒயில் கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றும் சொட்டை முனை, கட்டுத்தடி, வேல் கம்பு, சுருள் வாள், சிலம்பாட்டம் நடக்கிறது. கொங்கு மண்ணின் வழிபாடான கம்பத்தாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் மற்றும் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன.

    Next Story
    ×