search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி போடப்படாததால்  கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம்
    X
    கோப்புபடம். 

    தடுப்பூசி போடப்படாததால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம்

    • விவசாயத்தில் ஒரு பகுதியாக மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால்கறந்து விற்பனை செய்கிறோம்.
    • கோமாரி நோய் தாக்குவதை தடுக்க தடுப்பூசி மருந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை மருந்தகங்கள் 102 , கால்நடை மருத்துவ மனைகள் 7 , பன்முக கால்நடை மருத்துவமனை 2, 38 கால்நடை கிளை நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளது . அதேபோல் மாவட்டத்தில் நாட்டு மாடுகள் மற்றும் கலப்பின மாடுகள் 3.65 லட்சம், எருமைகள் 48 ஆயிரம், வெள்ளாடுகள் 35 ஆயிரம், செம்மறி ஆடுகள் 9.80 லட்சம் என கால்நடைகளின் எண்ணிக்கை உள்ளது. மாவட்டத்தில் உள்ள 450 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் மூலம் நாளொன்றுக்கு 24.34 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு 30 பால் குளிரூட்டும் நிலையங்களில் சேமிக்கப்பட்டு பின் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதில் அவிநாசி, திருப்பூர் வடக்கு, ஊத்துக்குளி, காங்கேயம், தாராபுரம் வட்டங்கள் கால்நடைகளின் செறிவு மிகுந்த பகுதிகளாகும். இப்பகுதிகள் பொதுவாக மானாவரி நிலங்களே அதிகம் இருப்பதால், இப்பகுதி உழவர்களின் வாழ்வாதாரம் என்பது பால் உற்பத்தி, இறைச்சிக்காக ஆடு வளர்ப்பு ஆகியவற்றையே பெரிதும் சார்ந்துள்ளனர் .

    பருவ மழைக் காலங்களில் மாடுகளை கோமாரி நோய் தாக்கி உயிரிழப்பு ஏற்படும். குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல் சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் உள்ளிட்ட காரணிகளால் கோமாரி நோய் ஏற்படுகிறது. கலப்பின மாடுகளுக்கு அதிக அளவில் இந்நோய் பாதிப்பு அதிகம் காணப்படும். இந்த நோய் பாதிப்பினால் கால்நடைகளுக்கு காய்ச்சல், மந்த நிலை, தீவணம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம், பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ் நீர் வரும், சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும்.

    மழை காலங்களில் இந்நோய் கால்நடைகளை தாக்குவதால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலம் துவங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், கோமாரி நோய் தடுப்பூசி வழங்கப்படும். இதனால் கடந்த காலங்களில் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடிந்தது. இந்தநிலையில் நடப்பு ஆண்டு தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பு மருந்து மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என கால்நடைதுறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயத்தில் ஒரு பகுதியாக மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால்கறந்து விற்பனை செய்கிறோம். இதனால் சொற்ப அளவில்தான் வருமானம் கிடைக்கிறது. பொதுவாக மழை ஆரம்பிக்கும் முன்பே கால்நடைதுறை சார்பில் கோமாரி நோய் தடுப்பு மருந்துகளை மாடுகளுக்கு செலுத்தி விடுவார்கள். ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு இன்னும் தடுப்பூசி மருந்து வழங்கவில்லை என்று கால்நடைதுறை அதிகாரிகள்கூறுகின்றனர். கோமாரி நோய் தாக்குவதை தடுக்க தடுப்பூசி மருந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×