search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாய ஆலைகள் தரச்சான்று பெறுவதன் மூலம் இயற்கை சார் ஜவுளி உற்பத்தி எளிதாகும்
    X

    கோப்புபடம்

    சாய ஆலைகள் தரச்சான்று பெறுவதன் மூலம் இயற்கை சார் ஜவுளி உற்பத்தி எளிதாகும்

    • சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.
    • வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி அடல் இன்குபேஷன் மையம், சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவனம் சார்பில் நீடித்த நிலையான இயற்கைசார் ஜவுளி உற்பத்தி குறித்த கருத்தரங்கு நடந்தது. திருமுருகன்பூண்டி தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.

    அடல் இன்குபேஷன் மைய முதன்மை செயல் அலுவலர் பெரியசாமி பேசுகையில், சர்வதேச சந்தைகளில் காலூன்றிய வர்த்தகர்கள், ஜவுளி ஏற்றுமதி வர்த்தகம் இயற்கை சார் உற்பத்தியில் உருவானதாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். குறிப்பாக வளம் குன்றா வளர்ச்சி மறுசுழற்சி தொழில்நுட்பத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

    தொழிற்சாலைகளில், கார்பன் உற்பத்தியாகும் அளவுக்கு அவற்றை உறிஞ்சும் இயற்கை சார் உற்பத்தி தொழில்நுட்பம் பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். அதற்கு சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் புளூசைன் தரச்சான்று அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் என்றார்.

    திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் பேசுகையில், திருப்பூரில் உள்ள பிரின்டிங் நிறுவனங்களுக்கு தரச்சான்று பெற பல்வேறு இடங்களில் விண்ணப்பிக்கிறோம். குறிப்பாக மாறுபட்ட 5 இடங்களில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. ஒரே தரச்சான்று பெற்றால் போதும் என்ற நிலையை வெளிநாட்டு வர்த்தகர்கள் எதிர்பார்க்கும்படி ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    சுவிட்சர்லாந்து புளூசைன் சிஸ்டம் நிறுவன அதிகாரி கத்திரினாள் மேயர் பேசுகையில், ஜவுளி உற்பத்தியில், பல்வேறு பிரிவில் ரசாயணம் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் இயற்கையான சாயம் பயன்படுத்தப்பட வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு கருதி நீடித்த நிலையான ஜவுளித்தரம் பராமரிக்க வேண்டும்.

    இந்தியா சர்வதேச நாடுகளுக்கான சந்தையாக இருக்கிறது. வர்த்தகம் என்ற நிலையை தாண்டி, நீடித்த நிலையான இயற்கைசார் உற்பத்திக்கு மாற வேண்டும்.பிரின்டிங் மற்றும் சாய ஆலைகள் தரச்சான்று பெறுவதன் மூலம் உலக அளவில் வர்த்தக வாய்ப்புகளை பெறலாம் என்றார்.

    திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், சாய விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். சாயம் மற்றும் பிரின்டிங் நிறுவனங்கள் தரச்சான்று பெறுவதன் மூலமாக நீடித்த நிலையான இயற்கை சார் ஜவுளி உற்பத்தி எளிதாகுமென கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×