search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண் துறை விளக்கம்
    X

    மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் - வேளாண் துறை விளக்கம்

    • இளம் புழுக்கள் மெல்லிய நூல் இலைகளை உமிழ் நீரால் பின்னி, ஒரு செடியிலிருந்து அடுத்த பயிருக்கு செல்ல வழிவகுக்கும்.
    • மக்காச்சோள படைப்புழு, 6 நிலைகளை கொண்டுள்ளது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமார் 2,400 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பு ராபி பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மக்காச்சோள பயிர் வளர்ச்சிப்பருவத்தில் உள்ளது.

    மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி, வட்டார துணை வேளாண் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண் அலுவலர் சுந்தரம் உள்ளிட்ட குழுவினர், படைப்புழு தாக்குதல் குறித்து வயலாய்வு செய்தனர்.

    இது குறித்து வேளாண்துறையினர் கூறியதாவது:-

    மக்காச்சோள படைப்புழு, 6 நிலைகளை கொண்டுள்ளது. இளம்பருவம் கருப்புநிற தலையுடன் பச்சை நிறத்திலும், மூன்றாவது பருவத்தில் பழுப்பு நிறம், ஓரங்களில் வெள்ளை நிறக்கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும்.புழுவின் 6வது நிலையில் தலை செம்பழுப்பாக வெண்ணிற கோடுகள் உடலின் ஓரத்தில் மேற்புறத்தில் காணப்படும்.

    முதலில் புழுக்கள் இலையின் அடியில் சுரண்ட ஆரம்பிக்கும்.இளம் புழுக்கள் மெல்லிய நூல் இலைகளை உமிழ் நீரால் பின்னி, ஒரு செடியிலிருந்து அடுத்த பயிருக்கு செல்ல வழிவகுக்கும். இளம் பயிர்களில் இலை பருவத்திலும், வளர்ந்த பயிரில் கதிர் பிடிக்கும் தருணத்தில் சுரண்டி உண்ண ஆரம்பிக்கும். இரவு நேரத்தில் புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

    படைப்புழுக்கள் மைய குருத்தை, உச்சி சுருள் இலையை மென்று சேதப்படுத்தும். இலைகள் ஆங்காங்கே கிழிந்து காணப்படும். 8 முதல் 14 நாட்கள் வயது உடைய புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்த கூடியது.தாய் அந்துப்பூச்சி மாலை நேரத்தில் மிகவும் வேகமாக இயங்கும். இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு, 20 என்ற அளவில் பயன்படுத்தி ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

    கடைசி உழவின் போது 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு, மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.அசாடிராக்டின் 2 சதவீதம் வேப்ப எண்ணெய் 2 மில்லி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிப்பதன் வாயிலாக, தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்க முடியும். ஒரே நேரத்தில் விதைப்பு செய்யலாம்.

    தற்போது படைப்புழுவின் சேதார அளவு, நடமாட்டம், பாதுகாப்பு நடவடிக்கையின் செலவு, மக்காச்சோள விலை ஆகியவற்றை கணக்கிட்டு பொருளாதார சேத நிலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் முடிவு செய்யப்படுகிறது. உயிரியல் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன பூச்சிகொல்லிகள் பரிந்துரை செய்யப்படுகிறது. பரிந்துரை செய்யப்படும் பூச்சிகொல்லிகளை கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் உபயோகித்து கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு வேளாண்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×