search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆணைய தலைவர் மனோஜ்குமார் தகவல்
    X

    கண்காட்சியை காதி கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ்குமார் திறந்து வைத்த போது எடுத்த படம். அருகில் அதிகாரிகள் உள்ளனர்.

    பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் முன்னேற்றம் அடைந்துள்ளது - ஆணைய தலைவர் மனோஜ்குமார் தகவல்

    • காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
    • 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    திருப்பூர் :

    பிரதமர் மோடியின் முயற்சியால், காதி கிராம தொழில் பொருள் விற்பனை 1.15 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது'' என மத்திய காதி கிராம தொழில் ஆணைய தலைவர் தெரிவித்தார். மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், காதி கிராம தொழில் ஆணையம் சார்பில், மாநில அளவிலான காதி நிறுவனங்களின் விற்பனை கண்காட்சி திருப்பூரில் நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை 10 நாள் இக்கண்காட்சி, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடக்கிறது.

    காதி கிராம தொழில் ஆணைய தலைவர் மனோஜ்குமார் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மேலும், பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் கடன் பெற்ற புதிய தொழில் முனைவோருக்கு மானிய தொகை விடுவிக்கப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.ஆணையத்தின் மாநில இயக்குநர் சுரேஷ் வரவேற்றார். தென் மண்டல துணை முதன்மை நிர்வாக அலுவலர் பாண்டே, திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மதுரை மண்டல இயக்குநர் அசோகன், திருப்பூர் சர்வோதய சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஆணைய தலைவர் மனோஜ் குமார் பேசியதாவது:- பிரதமர் மோடியின் சீரிய முயற்சியால் காதி தொழில் பெரும் முன்னேற்றம் பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாய் விற்பனை இலக்கு எட்டியுள்ளது. கிராம தொழில் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தி தொழிலுக்கு 50 லட்சம் ரூபாய்; சேவை தொழிலுக்கு 20 லட்சம் ரூபாய் கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் 1,432 பேருக்கு 51.42 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. வேலை தேடுவதற்குப் பதிலாக வேலை வழங்குவோராக மாற வேண்டும் என்ற பிரதமரின் பேச்சு அனைவருக்கும் ஊக்க மளிப்பதாக உள்ளது. அவ்வகையில் கிராம தொழில்கள் இன்று பெருமளவு வளர்ச்சி அடைந்து வருகிறது. தேனீ வளர்ப்போர் 11,750 பேருக்கு 1.75 லட்சம் தேனீப் பெட்டி; மண் பாண்ட உற்பத்தியாளர் 24,410 பேருக்கு பேட்டரி சக்கரம்; 3,316 ேபருக்கு தோல் பொருள் உற்பத்தி பயிற்சியும், 700 பேருக்கு கருவிகளும், 1,560 பேருக்கு அகர்பத்தி உற்பத்தி கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    காதி மற்றும் கைவினை பொருள் உற்பத்தியாளர் வருவாய் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. உள்ளூர் உற்பத்தி இன்று உள்நாட்டு அளவிலான உற்பத்தியாக மாறியுள்ளது. உலக அளவில் இதன் விற்பனையை கொண்டு செல்ல முயற்சிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×