search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரும்பு சாகுபடியை கைவிடும் விவசாயிகள் - சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    கரும்பு சாகுபடியை கைவிடும் விவசாயிகள் - சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

    • பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
    • காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் முன்பு பி.ஏ.பி., மற்றும் ஏழு குள பாசன திட்ட பகுதிகளில் கரும்பு பிரதானமாக பயிரிடப்பட்டு வந்தது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை மற்றும் வெல்லம் உற்பத்திக்காக தாலுகா முழுவதும் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.பி.ஏ.பி., பாசன திட்டம் நான்கு மண்டலமாக விரிவுபடுத்தப்பட்ட பிறகு குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

    இதையடுத்து ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட போடிபட்டி, வடபூதனம், சுண்டக்காம்பாளையம், பள்ளபாளையம், சந்தனக்கருப்பனூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கரும்பு பிரதான சாகுபடியாக மாறியது. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காகவும், விளைநிலங்களிலேயே வெல்லம் தயாரிக்கவும் கரும்பு சாகுபடி பரப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலை மாறி விட்டது. பெரியகுளம் உட்பட முக்கிய நீராதாரங்கள் அருகில் உள்ள பகுதிகளிலேயே கரும்பு சாகுபடி கைவிடப்பட்டு, தென்னை மற்றும் காய்கறி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கரும்பு சாகுபடியில் கரணை நடவு செய்து ஓராண்டுக்குப்பிறகே அறுவடைக்கு தயாராகிறது. ஆண்டு முழுவதும் பராமரித்து அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்படுவது விவசாயிகளை பாதிக்கிறது.

    அறுவடை சீசனில் ஒரு டன் கரும்பின் விலை 3 ஆயிரம் ரூபாயை கூட எட்டாதது, சாகுபடி செலவு அதிகரித்த நிலையில் நஷ்டத்தையே அளித்தது. வெல்ல தயாரிப்பிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன.பிழிதிறன் மற்றும் சர்க்கரை கட்டுமானம் குறைந்த கரும்பால் வெல்லம் தயாரிப்புக்கு செலவு அதிகரித்தது.சில இடங்களில் வெல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட கலப்படம் ஒட்டுமொத்தமாக சந்தையில், விலையை சரியச்செய்தது. இதனால் வெல்ல உற்பத்தி ஆலைகளும் இப்பகுதியில் குறைந்து விட்டது.எனவே கரும்பு சாகுபடி குறைந்து தென்னை மற்றும் காய்கறி சாகுபடி பரப்பு ஏழு குள பாசனப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏழு குள பாசன பகுதிகளில் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்ட கரும்பு சாகுபடி தற்போது குறைந்து விட்டது.அரசு, கரும்புக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கரும்பு சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்கள் எளிதாக கிடைக்கும் வகையில் சிறப்பு மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றனர்.

    Next Story
    ×