search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களை கட்டிய தீபாவளி ஷாப்பிங், ஜவுளிகள் வாங்க கடைவீதிகளில்  பொதுமக்கள் குவிந்தனர்- சூடுபிடிக்க தொடங்கிய பட்டாசு விற்பனை
    X

    கோப்பு படம்.

    களை கட்டிய தீபாவளி ஷாப்பிங், ஜவுளிகள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்- சூடுபிடிக்க தொடங்கிய பட்டாசு விற்பனை

    • மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
    • பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருப்பூரில் உள்ள கடைவீதிகளுக்கு மக்கள் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் துணி கடைகள், இனிப்பு கடைகள், அலங்கார ெபாருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், மின்சாதன பொருள், நகை கடைகள் உள்பட பல்வேறு வியாபார நிறுவனங்களில் பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    இதேபோல் ஓட்டல், சாலையோர கடைகளில் ஆடைகள் மற்றும் உணவு வகை, தின்பண்டங்களின் விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடை வீதிகளில் பொதுமக்கள் குடும்பத்தோடு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் வருவதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

    இதேபோன்று மாநகரில் உள்ள ரோடுகளில் வழக்கத்தை விட வாகனப்போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக புதுமார்க்கெட் வீதி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, மங்கலம் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபல் வீதி, குமரன் ரோடு உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் மின்கம்பங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் வகையிலான அறிவிப்புகளை ஒலிக்க செய்து வருகின்றனர். காலை முதல் இரவு வரை முக்கியமான நேரங்களில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இதேப்போல் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பண்டிகையின் பிரதானமாக பட்டாசு ரகங்கள் விற்பனையும் திருப்பூர் பகுதியில் துவங்கியுள்ளது. நிரந்தர பட்டாசு கடைகள், தற்காலிக பட்டாசு கடைகள், பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை நிலையங்கள் என திருப்பூர் பகுதியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பெரும்பாலான பட்டாசு ரகங்கள், கிப்ட் பேக் வகையில் விற்பனையாகிறது. இவை 10 முதல் 60 வகையான பட்டாசுகள் என்ற அடிப்படையில் பல்வேறு விலைகளில், அதாவது 500 ரூபாய் முதல் விற்பனைக்கு உள்ளது. இவை தவிர ரகம் வாரியாக சிறியது முதல் மிகப் பெரிய அளவிலான வெடிகள், சர வெடிகள், புஸ்வாணங்கள், மத்தாப்பு வகைகள், வானில் பறந்து சென்று வெடிக்கும் பட்டாசுகள், வண்ண மயமாக வெடித்து சிதறும் வாண வேடிக்கை பட்டாசுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட வகையில் விற்பனைக்கு வந்துள்ளன.

    நடப்பாண்டில் சிறுவர்களை ஈர்க்கும் விதமான பல்வேறு புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் சாக்லெட் வெடி, சாக்லெட் மத்தாப்பு, கேன் மாடல் புஸ்வாணம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட உயர சென்று வெடிக்கும் வெடிகள், ெஹலிகாப்டர் மாடல் வெடி, மேஜிக் புஸ்வாணம் போன்ற பல ரகங்கள் விற்பனையாகிறது. பழங்காலம் முதல் பிரபலமான ஓலை வெடி தற்போது ஓல்டு இன் கோல்டு என்ற பெயரில் தங்க நிறத்தில் மின்னும் ஓலை வெடிகள் பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. புஸ்வாண வகையில் மயில் வடிவத்திலான புஸ்வாணம் வெகுவாக கவருகிறது. சாக்லெட் மாடல் வெடி போன்று லாலி பாப் வடிவிலான ராக்கெட் பட்டாசும் உள்ளது. இரட்டைக்குழல் துப்பாக்கி என்பதோடு தற்போது இரட்டை துப்பாக்கியும் சிறுவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

    Next Story
    ×