என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    வேலூர் சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

    • சன்னதிகள் புதுபிக்கப்பட்டது
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் சுவர்ணபந்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடந்தது.

    1949-ம் ஆண்டு மார்ச் மாதம் தண்ணீர் பந்தல் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த 1963-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி ஆன்மீக பெரியோர்களால் அந்த இடத்தில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் உருவாக்கப்பட்டது.

    பின்னர் 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி சுந்தரராம் சுவாமிகளால் முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி அஷ்டபந்தன மற்றும் சுவர்ணபந்தன கும்பாபிஷேகம் நடந்தது.

    இதனை தொடர்ந்து தற்போது கோவிலில் உள்ள பழனி ஆண்டவர், ஐயப்பன், ஸ்ரீ ராமர், காசி விஸ்வநாதர், சனி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    கும்பாபிஷே கத்தையொட்டி கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜைகள் தொடங்கி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, மகாலட்சுமி யாகம் நடந்தது.

    கும்பாபிஷேகம்

    இதனை தொடர்ந்து இன்று 4-வது முறையாக சுவர்ணபந்தன, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை யாக பூஜைகளும், சுவாமிகளுக்கு அபிஷேகங்கள் நடந்தது.

    தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளாக சிம்ம லக்னத்தில் கோவிலின் கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த ஆலயத்தில் ஸ்ரீ பழனியாண்டவர் ஸ்ரீ ஐயப்ப சுவாமி சுவர்ணபந்தன முறையிலும், பரிவார மூர்த்திகளாகிய விநாயகப்பெருமான், அகில லோக நாயக நாயகியாகிய விசாலாட்சி சமேத விஸ்வநாதனுக்கும், காக்கும் தெய்வம் ஸ்ரீ வெங்கடாஜலபதி, சங்கடம் தீர்க்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் மூர்த்திகளுக்கு ரஜித பந்தனமும், குரு தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நால்வர் பெருமக்கள், பிணி தீர்க்கும் நவகிரக மூர்த்திகளுக்கு தாமிரபந்தன முறையிலும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகிகள் ஸ்ரீ வீரபத்திர சுவாமி நிர்வாக அறக்கட்டளை ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபையினர் , சைதாப்பேட்டை வாசிகள் செய்திருந்னர்.

    Next Story
    ×