என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்
- கால்நடை அலுவலகங்களில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிகலாம்
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்க, மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனாளியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவில், 50 சதவீதம் செலவு தொகை மானியமாக தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவீத பணத்தை தொழில்முனைவோர் முதலீடு செய்ய வேண்டும்.
அதன்படி தொழில் தொடங்க தேர்வு செய்யப்படுவோர், சொந்த ஊரில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அவரது பெயரில் கோழி கொட்டகை அமைக்க தேவைப்படும் 625 சதுரஅடி நிலம் பதிவாகி இருக்க வேண்டும்.
கொட்டகை அமைக்கும் இடம் மனித குடியிருப்பு பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தொழில்முனைவோர்
அருகில் உள்ள கால்நடை அலுவலகங்களில் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






