என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்த விபத்தில் பைக்கில் சென்ற 2 பேர் பலி
- வேலைக்குச் சென்று வீட்டிற்கு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை மிட்டூர் பகுதியில் வேலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டு பகுதியைச் சேர்ந்த திருமலை (40) என்பவர் ஓட்டி வந்த மினி லாரி மோதியதில் ராஜேந்திரன் தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூரை அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் கிரண் குமார் (17). இவர் புதுப்பேட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
கதிரிமங்கலம் கூட்ரோடு பகுதியில் சென்றபோது பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த முனிசாமி (65) என்பவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளும், கிரண்குமார் சென்ற மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் கிரண்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பத்தூர் தாலுகா போலீசார் கிரண்குமார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த முனிசாமி வேலூர் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.