search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமங்கலத்தில் மாணவரிடம் செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது
    X

    திருமங்கலத்தில் மாணவரிடம் செல்போன் பறித்த போலி போலீஸ்காரர் கைது

    • பள்ளி மாணவரிடம் இருந்து போலீசார் யாரும் செல்போனை பறிமுதல் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
    • கைதான விக்னேசை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழ உரப்பனூரை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் திருமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் ஜெராக்ஸ் எடுப்பதற்காக திருமங்கலம் முன்சீப் கோர்ட்டில் இருசக்கர வாகனத்தில் பிரபுவின் மகன் சென்றார். அப்போது அங்கு போலீஸ் சீருடை அணிந்த வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் பள்ளி சீருடையுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த பிரபுவின் மகனை வழிமறித்து நிறுத்தினார்.

    அவரிடம் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி. புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து அந்த மாணவர் தனது தந்தைக்கு போன் செய்வதற்காக செல்போனை எடுத்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த வாலிபர், மாணவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு, திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து அந்த மாணவர் தனது தாயிடம் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாணவரின் தாய் திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனிடம் போலீஸ்காரர் ஒருவர் சென்போனை வாங்கிச்சென்று விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் பள்ளி மாணவரிடம் இருந்து போலீசார் யாரும் செல்போனை பறிமுதல் செய்யவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மாணவரிடம் செல்போனை பறித்துச்சென்றது யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது வாலிபர் ஒருவர் போலீஸ் போன்று சீருடை அணிந்து மாணவரிடம் செல்போனை பறித்துச்சென்றது தெரிய வந்தது. மாணவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறிய அடையாளத்தை கொண்டு அந்த வாலிபரை போலீசார் தேடினர்.

    இந்தநிலையில் போலீஸ் சீருடையுடன் சுற்றிய அந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், திருப்பத்தூர் மாவட்டம் ஏரிக்குடி பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீஸ் போன்று நடித்து பள்ளி மாணவரிடம் செல்போன் பறித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான விக்னேசை திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ்காரர் போல் வலம் வந்து பல இடங்களில் ஏராளமானோரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×