என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் ஆனி வருசாபிஷேக விழா
- இன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
- இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.
திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவிலில் இன்று ஆனி வருசாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் மகா மண்டபத்தில் மூலவர், வள்ளி, தெய்வானை அம்பாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் குமரவிடங்க பெருமான் சன்னதியில் சண்முகம் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசங்கள் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிசேகம் நடைபெற்றது.
வருசாபிஷேக விழாவில், திருச்செந்தூர் கோவில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், கோவில் உள்துறை சூப்பிரண்டு ராஜேந்தின், தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.