என் மலர்
உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம் வழங்க கோரிக்கை
- தருமபுரியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தல்
- ஊதியம் ரூ.294 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமங்களில் பெரும்பாலானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு நடப்பு நிதியாண்டில் 4.63 விழுக்காடு ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.294 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டாலும் மறுபுறம் நல்லம்பள்ளி ஒன்றியம் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள 251 ஊராட்சிகளிலும் 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் ஆண்கள் பெண்கள் என அனைவருமே முழுமையாக இப்பணியை மட்டுமே நம்பி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்த சம்பள நிலுவை மற்றும் காத்திருப்பினால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 71 கோடியே 43 லட்சம் வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரிந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் வரவுள்ள தீபாவளி பண்டிகை கொண்டாடு வதற்கு குடும்ப பெண்கள் செலவினங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். குறித்து தகவல் அறிந்த மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் பிரதாபன் 3 மாதம் காலமாக நிலுவையில் உள்ள சம்பளத் தொகையினை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார்.






