search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை
    X

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

    • திருவண்ணாமலையில் போலீஸ் எழுத்து தேர்வில் முறைகேடு
    • முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என தகவல்

    வேங்கிக்கால்:

    தமிழ்நாட்டில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்றது.

    இந்த தேர்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற தேர்வில் திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தை சேர்ந்த சுமன் என்பவரின் மனைவி லாவண்யா பங்கேற்றார்.

    தேர்வின் போது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு சென்று செல்போனை பயன்படுத்தி, அதன் மூலம் வினாத்தாளை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலம் அனுப்பி வைத்து விடைகளை பெற்று விடைத் தாளில் குறிப்பிட முயன்ற முறைகேட்டில் லாவன்யா சிக்கினார்.

    இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாவண்யாவிற்கு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட அவரது கணவரான சப்- இன்ஸ்பெக்டர் சுமன், அவலூர்பேட்டையை சேர்ந்த சப் - இன்ஸ்பெக்டர் சிவக்குமார், செங்கத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் பிரவீன் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 29-ந் தேதி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு பல்வேறு கட்டுப்பாடு விதிகளுடன் நடைபெறும். தேர்வு நடைபெறும் வளாகத்திற்கு செல்போன் உள்ளிட்ட பொருட்கள் செல்ல அனுமதி கிடையாது.

    பலத்த சோதனைக்கு பின்னர் தான் தேர்வர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் தேர்வு மையத்திற்குள் லாவண்யாவிடம் எவ்வாறு செல்போன் வந்தது என்றும், தேர்வு மைய வளாகத்திற்குள் யார் செல்போனை கொண்டு கழிவறையில் வைத்தது என்பன உள்ளிட்ட கேள்விகள் போலீசார் மற்றும் சக தேர்வர்களிடையே எழுந்துள்ளது.

    தேர்வின் போது லாவண்யாவை போலீசார் சோதனை செய்ய முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குறிப்பிட்ட சில போலீசார் அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்வதற்காக நேற்று வெறையூர் போலீசார் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட லாவண்யா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து கைதான அவரது கணவர் சுமன், சிவக்குமார், பிரவீன் குமார் ஆகியோரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    Next Story
    ×