search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் மீது குட்கா கடத்தி வந்த கார் மோதி விபத்து
    X

    பஸ் மீது குட்கா கடத்தி வந்த கார் மோதி விபத்து

    • 200 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
    • ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா சென்றனர்

    செங்கம்:

    பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி குட்கா கடத்தி சென்ற கார் சுற்றுலா பஸ் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    பெங்களூரூவில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை காரில் கடத்திக்கொண்டு மர்ம கும்பல் திருவண்ணாமலை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இருந்து ஒகேனக்கல்லிற்கு சுற்றுலா செல்வதற்காக மினி பஸ்சில் சிலர் வந்து கொண்டிருந்தனர்.

    செங்கம் அடுத்த ரோடு கரியமங்கலம் பகுதியில் வளைவான சாலையில் பஸ் திரும்பியது. அப்போது எதிரே வந்த கார் சுற்றுலா பஸ் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் உருண்டு சென்று சாலையோரம் இருந்த பள்ளத்தில் நின்றது.

    இதை தொடர்ந்து காரை ஓட்டி வந்த மர்ம கும்பல் காரை அப்படியே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 10 மூட்டைகளுக்கு மேல் காரில் இருந்தது.

    அதனை பிரித்துப் பார்த்தபோது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள 200 கிலோ எடை கொண்ட குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் போதை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    சுற்றுலா சென்ற பயணிகள் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் சங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×