என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி 3½ வயது குழந்தை பலி
- சாலையில் விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 35). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (30). நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு வேல் அமுதன் (3 ½) என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை 7.45 மணி அளவில் வீட்டின் அருகே ஆற்காடு -காஞ்சிபுரம் சாலையில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. தனியார் கம்பெனி பஸ் ஆட்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தது. அப்போது சாலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது எதிர்பாராத விதமாக பஸ் மோதியது.
இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை வேல் அமுதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து குழந்தையின் தாத்தா சோமு என்பவர் பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






