search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கை நீட்டியதும் துள்ளி குதித்து ஓடிவரும் மான்கள்
    X

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் கை நீட்டியதும் துள்ளி குதித்து ஓடிவரும் மான்கள்

    • திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள மான்களுக்கு பொதுமக்கள் வழங்க உணவுகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள் உள்ளன.

    வனப்பகுதியில் இருந்து மான்கள் மக்கள் நடமாட்டம் உள்ள கிரிவலப்பாதைக்கு வருவதை தடுக்க வனத்துறை சார்பில் வனப்பகுதியின் எல்லையில் இரும்பு கம்பியால் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது அந்த இரும்பு வேலிகள் வரை துள்ளி குதித்து மான்கள் கூட்டமாக வருகின்றன. அந்த மான்களை கண்டதும் கிரிவலத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மான்களுக்கு பிஸ்கெட், பன், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி போடுகின்றனர்.

    வனவிலங்குகளான மான்கள் போன்றவை காட்டில் இயற்கையாக விளைய கூடிய செடி, கொடி, காய்கனிகளை சுயமாக தேடி உண்ணும் பழக்கத்தை கொண்டவை.

    மக்கள் உணவு பொருட்களை போடுவதால் மான்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு, குறிப்பிட்ட இடத்திற்கு சென்றால் உணவு கிடைக்கும் என்று சுயமாக உணவு தேடும் பழக்கத்தை மறந்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வருகின்றன.

    பெரும்பாலும் கிரிவலப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் எதிரே வனப்பகுதியில் காலை மற்றும் மதியம் வேலையில் மான்கள் கூட்டமாக வந்து நிற்கின்றன.

    மக்களை கண்டதும் பயந்து ஓடிவிடும் மான்கள் அவர்கள் கையை நீட்டியதும் உணவு பொருட்கள் தருகின்றனர் என்று அச்சமின்றி அருகில் வருகின்றன. மக்கள் அளிக்கும் உணவு பொருட்களால் சில சமயங்களில் மான்களுக்கு ஆபத்து ஏற்பட கூடும்.

    கிரிவலப்பாதையில் உள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகளை பாதுகாப்பது வனத்துறையினரின் கடமையாகும்.

    இதுகுறித்து திருவண்ணாமலை வனத்துறையினர் கிரிவலப்பாதையில் வனப்பகுதிகளில் உள்ள மான்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதுகுறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×