search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு-கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்கள் உருவம்
    X

    கடைகளில் பணம், பொருட்கள் திருட்டு-கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்கள் உருவம்

    • நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் அங்கு உள்ள காம்ப்ளக்ஸ்சில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அங்கு கல்லா பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம், ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள தின்பண்ட பொட்டலங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதேபோல் பேக்கரியின் மேல் பகுதியில் கணேசன் (45) என்பவர் சலூன் கடை வைத்துள்ளார். அங்கும் பூட்டை உடைத்து புகுந்த திருடர்கள் அங்கிருந்த ரூ.4 ஆயிரம் பணம், 2 கட்டிங் சேவிங் மெஷின்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    இதேபோல் சேலம் சீலநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ( வயது 44). இவர் சீலநாயக்கன்பட்டி ஆத்தூர் பைபாஸ் சாலையில் காஞ்சி நகர் பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் லாரி ஆபீஸ் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி இவரது அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில், அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக நேற்று கோபால கிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்து பார்த்தபோது, அலுவலகத்தில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் சில நபர்கள் கடைகளில் பொருட்களை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×