என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்  -அதிகாரி தகவல்
    X

    விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் -அதிகாரி தகவல்

    • தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும்.
    • விதைகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் எழிலரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான விதைகளே நல்விளைச்சலுக்கு ஆதாரமாகும். விதையின் தரம் என்பது விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, பிறரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். ஒரு பயிருக்கு தேவையான பயிர் எண்ணிக்கை பராமிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும்.

    நல்ல முளைப்புத் திறன் கொண்ட விதைகளை உபயோகிக்கும் போது தேவையான விதையை மட்டும் விதைப்பதால் விதை செலவு குறைகிறது. புறத்தூய்மை பரிசோதனையில் பிறப் பயிர் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளதா என கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.

    விதைகளை சேமிக்கும் போது பூச்சி நோய் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாட்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத் திறனைக் காக்க விதை பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

    எனவே, விதை விற்பனையாளர்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், தங்களிடம் உள்ள விதைகளில் விதை மாதிரிகள் எடுத்து, முகப்புக் கடிதத்துடன் பரிசோதனை கட்டணமாக ஒரு மாதிக்கு ரூ.80 என்ற விகிதத்தில் செலுத்தி, விதைப் பரிசோதனை நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தங்கள் விதைகளின் தரங்களை அறிந்து கொள்ளவும். தாங்கள் அனுப்பிய விதைகளின் பரிசோதனை முடிவுகளை 30 நாட்களுக்குள் தங்கள் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×