search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தராபுரம் அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலை
    X

    சுந்தராபுரம் அருகே பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்படும் சாலை

    • தீர்வு கிடைக்குமா? என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    • குறிச்சி காந்திஜி ரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் பகுதியில் குறிச்சி காந்திஜி ரோடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இச்சாலையானது பொள்ளாச்சி ரோட்டில் இருந்து ஆரம்பித்து சாரதாமில் ரோட்டில் முடிவடைகிறது.

    கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை பாரதி நகர் ,கேடிஎஸ் காலனி, தாயம்மாள் லே-அவுட் ,முருகன் கோவில் வீதி, முது பார் கோவில் வீதி, காமாட்சி அம்மன் கோவில் வீதி, லோகநாதபுரம், ஆண்டாள் தோட்டம் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் நாள் ஒன்றுக்கு இந்த வழியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ேமாட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களும் சென்று வரும் சாலையாகவும் உள்ளது.

    இப்படிப்பட்ட இந்த சாலையானது பல ஆண்டுகளாக தார் சாலையாக இல்லாமல், மண் சாலையாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலைகளில் செல்லும்போது வாகன ஓட்டிகள் மீது புழுதி படிகிறது. சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிப்பதால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆங்காங்கே விழுந்து விடும் சூழ்நிலை உள்ளது. காலை, மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றனர்.

    இப்பகுதியில் வசிப்பவர்கள் கால் டாக்ஸி மற்றும் ஆட்டோவை அழைக்கும் போது காந்திஜி ரோடு வருவதற்கு மட்டும் அழைக்க வேண்டாம் என கூறும் நிலையில் சாலை உள்ளது.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இச்சாலையில் மினிபஸ் ஓடி வந்தது. தற்போது சாலையின் அவல நிலைகண்டு ,மினி பஸ்களும் வருவதில்லை. இதனால் வெளியே செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளோம். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டி இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.

    மேலும் குண்டும் குழியுமான சாலை காரணமாக, பல முறை ஓடும் ஆட்டோவில் குழந்தை பிறந்த சம்பவம் இந்த சாலைக்கு வரலாறு உண்டு.

    இத்தகைய அவல நிலையில் வாழ்ந்து வருகிறோம். இதுதவிர பாதாள சாக்கடை திட்டம் என்று பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தி, ஆங்காங்கே தோண்டி சாலையை பிளாக் செய்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் வாழும் மக்களாகிய நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம்.

    இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ முறை கூறியும் எந்தவித பயனும் இல்லை. எனவே இப்பகுதியில் அதிவிரைவில் இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாவட்டத்திலேயே மிக மோசமான சாலை என்று கணக்கெடுத்தால், குறிச்சி காந்திஜி ரோட்டை தான் கூற முடியும். இந்த அவல நிலை மாற வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து ,இப்பகுதி மக்களை மனஉளைச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றனர்.

    Next Story
    ×