search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீனியாறு தண்ணீரை பாழ்படுத்தும்  மரவள்ளி கிழங்கு ஆலை மீது விவசாயிகள் புகார்
    X

    பீனியாறு தண்ணீரை பாழ்படுத்தும் மரவள்ளி கிழங்கு ஆலை மீது விவசாயிகள் புகார்

    • விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
    • பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த மாதம் விவசாயிகள் வழங்கிய மனுக்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் சாந்தி விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பீனியாறு பாதுகாப்பு விவசாயி சங்கத்தினர், கழிவுநீர் கலந்த தண்ணீரை வாட்டர் பாட்டிலில் எடுத்து வந்தனர். மேலும் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மரவள்ளி கிழங்கு அரவை ஆலை, பீனியாறு ஒட்டி இருப்பதால், பீணியாற்றில் வருகின்ற தண்ணீரை ஆலைக்குள் தேக்கி வைப்பதற்காக, 5 ஏக்கர் அளவில் ராட்சத குளம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஆலையில் இருந்து வெளியேறுகின்ற ரசாயன கழிவுகள் பீனி ஆற்றில் கலப்பதால், அந்தப் பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்துள்ளது. மேலும் 5 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய நிலங்களில் மண் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக இல்லாமல் விவசாயம் பாழடைந்து வருகிறது. எனவே அந்த மரவள்ளி ஆலை அரசின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதால், அதனை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்பொழுது புகாரின் அடிப்படையில் அந்த ஆலைக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

    ஆனால் விவசாயிகள் மின்சாரம் துண்டிப்பு என்பது தற்காலிகமான நடவடிக்கை தான். அதனை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும் அந்த ஆலையை அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும் அவ்வாறு பார்வையிடும் பொழுது விவசாயிகளையும், ஆய்வு செய்வதற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் விவசாயி முரளி என்பவர் உழவன் செயலி சரியாக வேலை செய்வதில்லை. இதில் விவசாயிகள் எவ்வாறு அரசின் சலுகைகளை பெற முடியும் எனவே அதனை சரி செய்ய வேண்டும் எனவும் புகார் தெரிவித்தார்.

    Next Story
    ×