search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே போலீஸ் மரியாதையுடன் உயிரிழந்த காவலர் உடல் அடக்கம்
    X

    அரூர் அருகே போலீஸ் மரியாதையுடன் உயிரிழந்த காவலர் உடல் அடக்கம்

    • நேற்று காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
    • 21 குண்டுகள் முழங்க காவலர் விஜயன் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார்.

    தற்பொழுது சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட விஜயனுக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தற்பொழுது சென்னை ஆலந்தூர், கண்ணன் காலனி,5-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு தனது மைத்துனர் வாசுதேவன் என்பவருடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்போது ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் விஜயன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து பரங்கிமலை காவல் துறையினர் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து காவலரை தாக்கிய அஜித், வினோத், விவேக் ரவிகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இறந்த காவலர் விஜயன் உடலை சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்திற்கு நேற்று காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச் சென்று மயானத்தில் காவல்துறையில் முழு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க காவலர் விஜயன் உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜயன் 5 மாத கைக்கு குழந்தையுடன் மனைவியை விட்டு சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் காவலர் விஜயனை இழந்ததால், கிராமம் முழுவதும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.

    Next Story
    ×