என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சாவூர் யூனியன் கிளப்பை முழுமையாக மீட்டெடுத்த மாநகராட்சி நிர்வாகம்
    X

    தஞ்சாவூர் யூனியன் கிளப்பில் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைக்கும் பணி நடைபெறுவதை மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டார்.

    தஞ்சாவூர் யூனியன் கிளப்பை முழுமையாக மீட்டெடுத்த மாநகராட்சி நிர்வாகம்

    • குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை.
    • 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 1872-ம் ஆண்டு வாசகசாலை மற்றும் நூலகம், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தொடங்கப்பட்டது.

    பின்னர் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை மதில் சுவர் இடிக்கப்பட்டு, அதிலிருந்த செம்புரான் கற்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 1874-ம் ஆண்டு அப்போதைய மாவட்ட நீதிபதி பர்னர் ஆர்தர் கோக் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

    இதையடுத்து 1892-ம் ஆண்டு இந்தக் கட்டிடத்துக்கு தஞ்சாவூர் யூனியன் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த கிளப்பில் ஹாவ்லேக் என்ற பெயரில் ஆங்கில நூலகமும், பாவேந்தர் பெயரில் 5 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய தமிழ் நூலகமும், டென்னிஸ் கிளப்பும் இயங்கியன.

    1919-ம் ஆண்டு பிப்.12-ம் தேதி தஞ்சாவூருக்கு வருகை தந்த ரவீந்திரநாத் தாகூர், இந்த யூனியன் கிளப்புக்கு வருகை தந்து உரையாற்றியுள்ளார். அதேபோல் அண்ணா, பாரதிதாசன் உள்ளிட்ட தலைவர்களும் வந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடங்களை நேரில் ஆய்வு செய்து, குத்தகை காலங்கள் தொடர்பான ஆவணங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்தது.

    இதில் 99 ஆண்டுகள் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறி யூனியன் கிளப் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தண்டாரோ மூலம் அறிவித்து இடங்களை கையகப்படுத்துவதாக நோட்டீஸ் ஒட்டியது.

    இதனால் தஞ்சாவூர் மாநகராட்சியை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு வந்தது.

    அதில் மாநகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் யூனியன் கிளப்புக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என எழுதப்பட்டது.

    இது தொடர்பான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    தஞ்சை நகரின் மையப் பகுதியில் யூனியன் கிளப் இயங்கி வந்தது.

    150 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஆகும். இங்கு நூலகம் இயங்கி வந்தது.

    இந்த இடத்திற்கு பல்வேறு தலைவர்கள் வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் இந்த யூனியன் கிளப் தனியார் வசமானது.

    தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் யூனியன் கிளப் கையகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கின் தீர்ப்பு மாநகராட்சிக்கு சாதகமாக வந்துள்ளது.

    தற்போது மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இதன் மொத்த பரப்பளவு 35 ஆயிரம் சதுர அடி ஆகும். இவற்றின் மதிப்பு 60 முதல் 75 கோடி வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீட்கப்பட்ட யூனியன் கிளப் கட்டிடத்தில் அடுத்து என்ன செய்யலாம் என ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.

    பொது மக்களிடம் கருத்து கேட்கப்படும். தற்போது கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×