search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை சிவகங்கை பூங்கா 3 மாதத்தில் திறக்கப்படும்- மேயர் பேட்டி
    X

    மேயர் சண்.ராமநாதன்

    தஞ்சை சிவகங்கை பூங்கா 3 மாதத்தில் திறக்கப்படும்- மேயர் பேட்டி

    • சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன.
    • குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 பணிகள் எடுக்கப்பட்டு அதில் 92 பணிகள் முடிந்துள்ளது. மீதம் 20 பணிகள் நடந்து வருகிறது. 4 மாதத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். கடன் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி விளங்குகிறது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறது .

    தஞ்சையில் பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நவீன எந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தப்படுத்தப்படுகிறது .

    சிவகங்கை பூங்காவில் நடந்து வரும் பணிகளில் பெரும்பாலானவை முடிந்து விட்டன. இன்னும் 3 மாதத்தில் சிவகங்கை பூங்கா திறக்கப்படும்.

    முதலாம் ஆண்டு நிறைவடைந்து தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். வளர்ச்சியை நோக்கி தான் அனைத்து பணிகளும் இருக்கும். ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது .

    10 ஏக்கர் அளவில் சுத்தப்படுத்தப்பட்டு விட்டன. குப்பை கிடங்கு முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு 10 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பும், 10 ஏக்கரில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும். பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு இந்த யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும்.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 51 வார்டுகளிலும் ஆய்வு செய்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினோம். அவற்றின் அடிப்படையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற ரூ.1112 கோடி மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அமைச்சர் கே. என். நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் மக்களோடு மேயர் என்ற தலைப்பில் மக்களை சந்திக்க உள்ளோம்.

    திருவையாறு பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி பள்ளி அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் வாகன பார்க்கிங் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவிலை சுற்றி பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இருக்காது .

    புதிய பஸ் நிலைய புனரமைப்புக்காக ரூ.50 கோடி, மீன் மார்க்கெட் கட்ட ரூ.35 கோடி, சீனிவாசபுரம் - டி.பி.எஸ். நகரை இணைக்கும் வகையில் ரூ.120 கோடியில் பாலம் கட்ட திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 17 மாநகராட்சி பள்ளிகளில் சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்படும்.

    தஞ்சை மாநகராட்சியில் குறைந்தபட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. 30 எம்.எல்.டி தண்ணீர் தான் தேவை. ஆனால் 60 எம்.எல்.டி தண்ணீர் வரப்போகிறது. இதை தவிர விளார், மாரியம்மன் கோவில், நாஞ்சிக்கோட்டை, பிள்ளையார்பட்டி உள்பட 13 ஊராட்சிகள் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணையப் போகிறது. அப்படி இணையும் போதும் தண்ணீர் பிரச்சனை இருக்காது.

    வருகிற 8-ந்தேதி தஞ்சாவூர் ெரயில்வே நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம். தஞ்சையில் இன்னும் 6 மாதத்தில் விமான சேவை தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×