என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூர்த்தி, பைக் எரிந்து கிடக்கும் காட்சி.
தருமபுரி அருகே பரபரப்பு: குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த கட்டிட மேஸ்திரி
- மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை எடுத்து வண்டியின் மீது தெளித்து கொளுத்தினார்.
- அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பைக்கை கொளுத்தியுள்ளார்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள அரசம்பட்டி காவாகட்டியூரை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் மூர்த்தி (வயது22).
இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று ஊருக்கு வந்த மூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் தருமபுரிக்கு வந்துள்ளார். பின்னர் பஸ் நிலைய பகுதியில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் ஊருக்கு கிளம்பிய மூர்த்தி மதிகோன்பாளையம் அருகேயுள்ள எஸ்.கொட்டாவூர் என்கிற பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை எடுத்து வண்டியின் மீது தெளித்து கொளுத்தினார். இதில் அவரது வாகனம் கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்து அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மதிகோன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் இது பற்றி போலீசார் மூர்த்தியிடம் விசாரித்த போது மதுபோதையில் வண்டிக்கு தீ வைத்ததாக கூறினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






