search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெகிழியில் டீ, காபி- சூடான உணவு பொருள்கள் பார்சலில் வழங்க கூடாது-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை
    X

    உணவகம் ஒன்றில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

    நெகிழியில் டீ, காபி- சூடான உணவு பொருள்கள் பார்சலில் வழங்க கூடாது-உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை

    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்தியும் பொட்டலமிட்டும், விநியோகம் செய்த பலகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, உணவு பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் தருமபுரி நகராட்சி மற்றும் இலக்கியம்பட்டி, செந்தில் நகர், நேதாஜி பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சைவ, அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது ஒரு சில உணவகங்களில் குளிர் பதன பெட்டிகளில் இருந்து இருந்து பழைய இருப்பு வைத்திருந்த கெட்டுப் போன கோழி மற்றும் ஆட்டு இறைச்சிகள் பறிமுதல் செய்து அழித்து அப்புறப்படுத்தப்பட்டது.

    இறைச்சிகளில் குறிப்பாக சில்லி சிக்கன், மீன் இறைச்சிகளில் செயற்கை நிறமேற்றி பவுடர்கள் கண்டிப்பாக பயன்பாடு கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள இரண்டு உணவகங்கங்களுக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து உரிய காலத்தில் குறைபாடுகளை களையாவிட்டால் கடையை சீல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது.

    மேலும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பைகளில் சாம்பார்,சட்னி மற்றும் சூடான உணவுப் பொருள்கள் பார்சல் செய்வதை கண்டிப்பாக அறவே தவிர்க்க வேண்டும். தவறினால் அபராதம் விதித்து மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவகங்களுக்கு எச்சரிக்கப்பட்டது.

    பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பீடா பெட்டி கடைகள், குளிர்பான கடைகள், தேநீர் கடைகள் மற்றும் பழக்கடைகள் மற்றும் சிற்றுண்டி உணவுகளில் ஆய்வு செய்தபோது ஒரு சில கடைகள் உரிய உரிமம் பெறாமலும் காலாவதியான உணவு பாதுகாப்பு சான்றிதழ் வைத்திருந்து வணிகம் செய்வதை கண்டு எச்சரித்து உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு விண்ணப்பித்து சான்று பெற்று நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைத்து வணிகம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.

    ஒரு சில பீடா கடைகள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகள் இருந்து உரிய தேதி இல்லாமலும் உரிய விவரங்கள் அச்சிடாத தின்பண்டங்கள், அச்சிட்ட காகிதங்களில் எண்ணெய் பலகாரங்களை காட்சிப்படுத்தியும் பொட்டலமிட்டும், விநியோகம் செய்த பலகாரங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் நெகிழியில் டீ, காபி மற்றும் சூடான உணவு பொருள்கள் கண்டிப்பாக பார்சல் விடக்கூடாது என வணிகர்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். ஆய்வில் பத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், பேக்கரி மற்றும் பெட்டி கடைகளுக்கு அபராதமாக மொத்தம் ரூ.12,000 விதிக்கப்பட்டது.

    Next Story
    ×