என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி கலெக்டர் அலுவலகம் எதிரே ராமன் நகர் பகுதிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்.
சேறும்,சகதியுமாக மாறிய தார்ச்சாலை: சீரமைக்க கோரிக்கை
- பொதுமக்கள் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக மாறியுள்ளது.
- பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தருமபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி மற்றும் இலக்கியம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகர் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது.
இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இச்சாலை வழியாக ஏமக்குட்டியூர், வத்தல்மலை, நூலஅள்ளி, மொடக்கேரி, எட்டிமரத்துபட்டி, உழவன் கொட்டாய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை தற்போது சேரும் சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது.
மேலும் மழைக்காலங் களில் சாலை சேரும் சகதியுமாக மாறிப்போன தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் அவதிபடுகின்றனர். இந்நிலையில் புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சாலை சீரமைக்கப்படவில்லை.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மழை நீருடன் சேறும் கலந்ததால் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக மாறியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;-
ராமன் நகர் மற்றும் அதியமான் நகர் பகுதிக்கு முறையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் சாதாரண மழைக்கே இந்த நிலைக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியமாக உள்ளது.
இந்த வழியில் நடந்து கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கரத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






