search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று நாடகமாடிய வாலிபர் கைது
    X

    பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

    • 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர்.
    • பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி யமுனா (42). தனியார் பள்ளியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 11-ம்வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த 26-6-2023 அன்று அண்ணாதுரை மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். யமுனா வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனர். மாலை வீடு திரும்பிய போது அண்ணாதுரை மயக்கமடைந்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யமுனா மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அண்ணாதுரை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அண்ணாதுரை தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அண்ணாதுரை கழுத்தை நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. மேலும் பின்னந்தலையில் காயங்கள் இருந்தது. தூக்குப்போட்டு தற்கொலை செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினர்.

    அண்ணாதுரையின் உறவினர்கள், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணினர். இருப்பினும் அண்ணாதுரை சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

    அப்போது அண்ணாதுரை இறக்கும் போது அவருடன் கடைசியாக இருந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். இதில் மண்ணரை பகுதியை சேர்ந்த நந்தகோபால் (36) என்பவர் இருந்துள்ளார். எனவே அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது அண்ணாதுரையை கொலை செய்ததை நந்தகோபால் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அண்ணாதுரைக்கு நந்தகோபால் கடன் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்பதற்காக அண்ணாதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் அண்ணாதுரையின் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் மயங்கி விழவே வீட்டில் இருந்த துப்பட்டாவால் அண்ணாதுரையின் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சென்று விட்டார்.

    போலீசார் விசாரணை நடத்திய போது அண்ணாதுரை வீட்டிற்கு நந்தகோபால் வந்து சென்றதுடன், தான் கொலை செய்ததை மறைத்து ஒன்றும் தெரியாதது போல் இருந்து நாடகமாடியுள்ளார். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டார். 5 மாதங்களாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியை பிடித்துள்ளனர். தொடர்ந்து நந்தகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளியை கொன்று வாலிபர் நாடகமாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×