என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏத்தாப்பூர் அருகே நள்ளிரவில் 10 வீடுகளில் புகுந்த கொள்ளை கும்பல்
- ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 5 பேர் கொண்ட கும்பல், 10 இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்ம கும்பல், ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், சௌந்தர்ராஜன், பழனி, சத்தியா, முருகன், துரைசாமி உள்ளிட்டோரின் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் துரைசாமி என்பவர் தனது மனைவி கலைச்செல்வி மற்றும் குழந்தைகளோடு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் சிலர் துரைசாமி வீட்டின் உள்ளே புகுந்தனர்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்த கலைச்செல்வியை தாக்கியதுடன், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர். இதேபோல் அருகில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளிலும் புகுந்த கொள்ளையர்கள், நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏத்தாப்பூர் போலீஸ் நிலையம் அருகிலேயே நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.






