என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான பிரபு.
விபத்தில் இறந்த கணவனின் கண்களை தானமாக வழங்கிய மனைவி
- விபத்தில் கணவனை இழந்த சூழலிலும், சந்தியா துரிதமாக முடிவெடுத்து பிரபுவின் கண்களை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- விபத்தில் பிரபு உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து, சங்ககிரி மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, வேலம்மாவலசு பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 35). பி.இ. பட்டதாரி. இவர், அதே பகுதியில் ரெடிமேட் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சந்தியா (32) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர்.
இந்நிலையில் பிரபு நேற்று மாலை வைகுந்தத்தில் இருந்து சங்ககிரி நோக்கி டூவீலரில் சென்றார். ஆவரங்கம்பாளையம் என்ற இடத்தில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோட்டூர்மலை பகுதியைச் சேர்ந்த பழனிவேல்(50) என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி, பிரபுவின் டூவீலர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற டிப்பர் லாரி டிரைவர் பழனிவேல், பச்சாபாளையம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆயில் லோடுடன் நின்றிருந்த லாரி மீது மோதி, மற்றொரு விபத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த விபத்தில் மயக்கம் அடைந்த பழனிவேலுவை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவங்கள் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தில் பிரபு உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்து, சங்ககிரி மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி சந்தியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். அப்போது சந்தியா, கணவனின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்து மருத்துவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஈரோடு தனியார் கண் மருத்துவமனையினர் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு வந்து பிரபுவின் கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.
விபத்தில் கணவனை இழந்த சூழலிலும், சந்தியா துரிதமாக முடிவெடுத்து பிரபுவின் கண்களை தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






