search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    • கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

    அதன்படி காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

    இதைதொடர்ந்து நடந்த காவிரி மேலாண்மை அவசர கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது.

    கடந்த 21-ந்தேதி இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 5473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3838 கனஅடியும் என மொத்தம் 6 ஆயிரத்து 338 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

    Next Story
    ×