என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு 9 டி.எம்.சி.க்கு கீழ் குறைந்தது
- கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெற முடியும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
- கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி அதன் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி தண்ணீர்(11.7 டி.எம்.சி.) சேமித்து வைக்கலாம்.
தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8569 மி. கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது. நீர் இருப்பு 9 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து விட்டது.
எனினும் ஏரிகளில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து இன்னும் 8 மாதத்துக்கு சென்னையில் சப்ளை செய்ய முடியும். எனவே வரும் நாட்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். மேலும் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெற முடியும் என்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு3231 மி.கனஅடி. இதில் 1735 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 818 மி.கனஅடியும், புழல் ஏரியில் 3300 மி.கனஅடியில் 2403 மி.கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3645 மி.கனஅடியில் 3113 மி.கனஅடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது. கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரி அதன் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடி முழுவதும் நிரம்பி காணப்படுகிறது.






