என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர்-குடியாத்தத்தில் நள்ளிரவில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை
- குடியாத்தத்தில் அதிகாலை 2 மணியளவில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
- திருவண்ணாமலை, செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 நாட்களாக மேல இருக்கு சுழற்சி காரணமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், தொரப்பாடி, பாகாயம், கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
காட்பாடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் காலதாமதமாக கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையாததால் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீருடன் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
குடியாத்தத்தில் அதிகாலை 2 மணியளவில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. அண்ணாமலை தெரு, ராஜாஜி தெரு காட்பாடி ரோட்டில் மரங்கள் சாய்ந்து விழுந்தன.
பாக்கம் கிராமத்திலும் மரங்கள் சாய்ந்து விழுந்தது. சூறை காற்றால் பாக்கம், சேம்பள்ளி, உப்பரப்பள்ளி தட்டப்பாறை, பரதராமி, சைனகுண்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது.
உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோவில் இடிந்தது. சாலையில் சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, செய்யாறு, வெம்பாக்கம் பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. அறுவடைக்கு தயாராகி இருந்த சுமார் 1200 ஏக்கர் விளை நிலங்கள் சேதமடைந்தது.
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
வேலூர் 21.8, காட்பாடி 23, குடியாத்தம் 52, பேர்ணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, பொன்னை 19.