search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லா துறைகளிலும் ஜொலிக்கும் திருநங்கைகள்- போலீஸ், வக்கீல், டாக்டர், என்ஜினீயர் ஆனவர்களின் சாதனை வரலாறு
    X

    தீபிகா - சத்யா - செல்வி

    எல்லா துறைகளிலும் ஜொலிக்கும் திருநங்கைகள்- போலீஸ், வக்கீல், டாக்டர், என்ஜினீயர் ஆனவர்களின் சாதனை வரலாறு

    • திருநங்கைகள் வாய்ப்பு கிடைத்தால் சாதித்து காட்டுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக போலீசாக, வக்கீலாக, டாக்டராக, என்ஜினீயர்களாக உருவாகியுள்ளனர்.
    • தவறான பாதையில் சென்ற 10 திருநங்கைகளை நல்வழிப்படுத்தி படிக்க வைத்து வங்கியில் மேலாளராக ஐ.டி. கம்பெனிகளில் என்ஜினீயர்களாக உருவாக்கியுள்ளேன்.

    மனிதனாக பிறந்தும் மனிதர்களுடன் சேர்த்துக் கொள்ள தயங்கும் சபிக்கப்பட்ட சமூகமாக உள்ளது திருநங்கையர்கள் சமூகம். எல்லோரும் போல் ஒரு தாயால் 10 மாதம் சுமந்து பெற்றெடுக்கப்பட்டு வளர்ந்த நாட்களில் பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் பெற்றோர் முதல் உற்றார், உறவினர்கள் என்று எல்லோராலும் ஒதுக்கப்பட்டு மனம் வருந்தி குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் திருநங்கையர்கள்.

    கண்ணில் பார்த்திராத திருநங்கை வேடம் பூண்ட அர்ஜூனனை போற்றி புகழும் இந்த சமூகம் கண் எதிரில் வாழும் திருநங்கைகளை நம்மை போல் உள்ளவர்கள் தான் என்று ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. வீட்டை விட்டு ஊரை விட்டு துரத்தப்பட்டு வந்த இந்த சமூகம் இப்போது அனைத்து துறைகளிலும் கால் எடுத்து வைத்து சாதனை புரிந்து வருகிறது.

    திருநங்கைகள் வாய்ப்பு கிடைத்தால் சாதித்து காட்டுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக போலீசாக, வக்கீலாக, டாக்டராக, என்ஜினீயர்களாக உருவாகி இந்த சமூகத்தை அனைவரின் தவறான பார்வையில் இருந்தும் நீக்கி வரலாறு படைத்து வருகிறார்கள். பெருமை சேர்த்த திருநங்கைகளின் சாதனைகளை பார்ப்போம்.

    புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரியும் தீபிகா என்ற திருநங்கை கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் தென்காசி மாவட்டம். சிறிய வயதில் தாயை இழந்து விட்டேன். எனக்கு ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர். அப்பா கூலி வேலை செய்தார். பள்ளி படிப்பை எங்கள் ஊரில் முடித்தேன். எனக்கு சிறிய வயதில் இருந்தே காவலர் உடை அணிந்து போலீசாக பணியாற்ற வேண்டும் என்று தீராத ஆசை.

    இந்த நிலையில் பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு 2010-ம் ஆண்டு சென்னை வந்தேன். மூன்று நாட்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் தங்கியிருந்தேன். அப்போது சத்யா என்ற திருநங்கையிடம் எனது நிலையை கூறினேன். அவருடன் சில காலங்கள் தங்கி இருந்தேன். அவர்களுக்கும் சரி, என்னோடு இருந்த திருநங்கைகளுக்கும் சரி எனது எதிர்கால கனவான போலீஸ் வேலை பிடிக்கவில்லை. எனது கனவை சிதைக்கும் நோக்கில் கடுஞ்சொற்களால் என்னை வசைபாடினர். இதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களிடமிருந்து வெளியேறினேன்.

    அதன் பின்பு அஸ்வினி என்ற திருநங்கை எனக்கு உதவி செய்து தோழி அமைப்பை சேர்ந்த சுதா, சகோதர அமைப்பை சேர்ந்த ஜெயா சுதா அம்மா ஆகியோரின் உதவியுடன் போலீஸ் வேலைக்கு தயாரானேன். மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியை கண்டேன். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு ஊரடங்கால் எனது கனவு சிதைந்தது. எனது நிலையை கேள்விப்பட்டு அப்போதைய சூளைமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு பேரூதவி செய்தார். உடல் தகுதிக்காக ஊட்டச்சத்து முதல் தேர்வுக்கான புத்தகங்களையும் வாங்கி கொடுத்தார். இது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.

    பின்பு இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் எனக்கு ஊட்டச்சத்து முதல் சத்தான உணவுகளை வழங்கி ஊக்கமளித்தார். நான்காவது முறை தேர்வு எழுதி ஜெயித்துக்காட்டி போலீசுக்கு தேர்வானேன். பயிற்சிக்காக திருச்சி செல்ல வேண்டிய சூழ்நிலை. எனது கையில் பணம் இல்லை. உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வன், சப்- இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரன் ஆகியோர் உதவியுடன் போலீஸ் பயிற்சிக்காக சென்றேன்.

    அங்கும் உயர் அதிகாரிகள் என்னை தனது பிள்ளையை போல் அரவணைத்து ஊக்கப்படுத்தி நல்ல முறையில் பயிற்சியை நிறைவு செய்ய வைத்தார்கள். நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற அனைவரும் தாய் தந்தையுடன் சான்றிதழை பெற்றார்கள். தாய்ப் பாசத்தால் இயக்கத்தில் இருந்த என்னை அதிகாரிகள் ஆறுதல் படுத்தி வழி அனுப்பினார்கள்.

    முதலில் கண்ணகி நகரில் போலீஸ் பணியை தொடங்கினேன். அதன் பின்பு தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினேன். இன்று முதல் புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுகிறேன்.

    இந்தத் திருநங்கைகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த சமூகத்தின் மீது உள்ள தவறான சொல்லை நீக்கி நாங்களும் சாதனையாளர்களே என்று நிரூபிப்போம் என்றார்.

    முதல் திருநங்கை வழக்கறிஞரான சத்யா கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் பரமக்குடி. எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள் உள்ளனர். அப்பா அரசு வேலையில் இருந்தார். நடுத்தர குடும்பம். பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் குடும்பத்தில் இருந்து விலகி திருநங்கைகளுடன் செங்கல்பட்டு நடராஜபுரத்தில் வாழ்ந்து வருகிறேன். எங்களது சமூகத்தை கவுரவப்படுத்தும் எண்ணத்தில் பட்டப்படிப்பு முடித்து சேலம் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தேன். ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தேன். அதன் பின்பு இங்கிருந்த படி பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் டாக்குமெண்ட் பண்ணி கொடுத்து வருகிறேன். எங்களை சிலர் தெய்வமாக பார்க்கிறார்கள். அவ்வாறு பார்க்க வேண்டாம். சக மனிதர்களாக பார்த்தாலே போதும். நான் வழக்கறிஞர் ஆகி திருநங்கைகளுக்காக நர்சிங் கவுன்சிலில் திருநங்கைகளுக்கு என்று ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் வாங்கி கொடுத்தேன்.

    திருநங்கைகளுக்கு சொல்லிக் கொள்வது விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் நமக்கென்று எந்த தடை வந்தாலும் அதை உடைத்து எறிந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறுவோம் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சர் எங்கள் மீது கருணை காட்டி எங்களுக்கும் பல்வேறு துறைகளில் உள்ள அரசு வழக்கறிஞர் பதவியை வழங்கினால் சிறப்பாக செயல்படுவதுடன் எங்களது சமூகமும் பெருமை அடையும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணிபுரியும் செல்வி கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சீவலப்பேரி. பள்ளி படிப்பு முடிந்ததும் ஊரிலிருந்து வந்து அரசு இடஒதுக்கீட்டில் படித்து பிசியோதெரபி டாக்டர் ஆனேன். சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே முதலில் பணிபுரிந்து பின்பு திருநங்கை ரோஸ், தியாகராஜன் ஆகியோர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி டாக்டராக பணி அமர்த்தப்பட்டேன். திருநங்கையாக பல தடைகளையும், அவமானங்களையும் வீடு கிடைக்காமலும் கஷ்டப்பட்ட நான் இப்போது ஏராளமானோருக்கு மனோதத்துவ பயிற்சி கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துகிறேன்.

    தவறான பாதையில் சென்ற 10 திருநங்கைகளை நல்வழிப்படுத்தி படிக்க வைத்து வங்கியில் மேலாளராக ஐ.டி. கம்பெனிகளில் என்ஜினீயர்களாக உருவாக்கியுள்ளேன். டாக்டராவதற்கு முன்பு செக்யூரிட்டி வேலை செய்து சில திருநங்கைகளை காப்பாற்றினேன். பாலியல் தொழிலுக்கு போகாமல் உழைத்து தான் வாழ வேண்டும் என்பதை திருநங்கைகளுக்கு வலியுறுத்தி வருகிறேன். பரதத்தின் மீது எனக்கு நேசம் அதிகம். நன்றாக பரதம் கற்றுக்கொண்டு சில நாட்களுக்கு முன்பு எங்களது அரங்கேற்றம் நடந்தது. இவ்வாறு அனைத்து துறைகளிலும் நாங்கள் சாதித்து வருகிறோம் என்றார்.

    தானியா ராதாகிருஷ்ணன் என்ற திருநங்கை கூறியதாவது:-


    தானியா

    எனது சொந்த ஊர் கோவை. நான் 2012- ல் பள்ளி படிப்பை முடித்து பின்பு எம்.பி.ஏ., பி.டெக்., முடித்து எம்.எஸ்.டபிள்யூ படித்து வருகிறேன். நான் தற்போது பிளிப்கார்ட் கம்பெனியில் நிர்வாக மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறேன். திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழிலாளர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்ற தவறான பிம்பம் உள்ளது. இதை கண்டிப்பாக மாற்றி காட்ட வேண்டும். எங்களாலும் சாதிக்க முடியும் என்பதற்காகவே தன்னம்பிக்கையுடன் படித்து இன்று நான் நல்ல வேலையில் உள்ளேன். கம்பெனியில் எனது வேலையின் திறமையை பார்த்து சக ஊழியர்கள் பாராட்டி என்னை பெருமைப்படுத்துவர்.

    என்னுடன் 400 பேர் வேலை பார்த்தால் அவர்களுக்கு எங்கள் மீது உள்ள தவறான பிம்பம் போய் விடுகிறது. ஆயிரம் பேர் என்னை அறிந்தால் அந்த ஆயிரம் பேருக்கும் தவறான எண்ணம் போய் எங்கள் மீது ஒரு நல்ல நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் எங்கள் அம்மாவே என்னை பார்த்து தவறான கேள்வியை கேட்க வைத்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். எங்களுக்கும் மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மேலும் மேலும் வளர்ந்து சாதனை படைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருநங்கைகளுக்கான தோழி அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா கூறியதாவது:-


    சுதா

    திருநங்கை சமுதாயத்தின் மீது இருந்த ஏளனப் பார்வையை போக்கி வருகிறோம். இதற்காக எங்கள் சமூகத்தினரை பல்வேறு துறைகளில் சாதனை படைக்க ஊன்று கோலாக இருக்கிறோம். கல்வி, வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்க எங்கள் மீதுள்ள தவறான எண்ணத்தை போக்கி சாதனை படைத்து பெருமை சேர்த்து வருகிறோம்.

    முதலமைச்சரும் எங்களுக்கு நல்ல பேரூதவி செய்து வருகிறார். திருநங்கைகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து வீறு நடைபோடுவதே எங்கள் இலக்கு என்றார்.

    Next Story
    ×