search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருவள்ளூர் மாவட்டத்தில் 615 காவலர்களுக்கு பயிற்சி நிறைவு விழா

    • விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார்.
    • சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த 183 ஆண் காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், பயிற்சி பள்ளி முதல்வருமான சீபாஸ் கல்யாண் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அனுமந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குச் சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பயிற்சி முடித்து காவல் பணியில் ஈடுபட போகும் உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை பார்க்கும்போது எனது பயிற்சி காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது உங்களது குடும்பத்தினர் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

    இந்தப் பயிற்சி காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். நான் பொறியியல் பட்டதாரி. தற்போது காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ளேன். அதேபோல் தற்போது இந்த பயிற்சியில் 83 பொறியாளர்கள் காவல் பயிற்சி பெற்றுள்ளீர்கள். நீங்கள் இத்துறையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேறுங்கள். தற்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். பணியின் போது, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் வீர சாகச, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    முடிவில் காவலர் பயிற்சி பள்ளியின் முதன்மை சட்ட போதகர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    இதேபோல் திருவள்ளுவர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் 432 பெண்

    காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

    விழாவுக்கு காவல்துறை தலைவர் (பொது) ராதிகா கலந்து கொண்டு பயிற்சியின்போது கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பெண் காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    Next Story
    ×