என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் சரக்கு ரெயில் மோதி ஊழியர் உடல் துண்டாகி பலி
    X

    ஈரோட்டில் சரக்கு ரெயில் மோதி ஊழியர் உடல் துண்டாகி பலி

    • ஈரோடு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை மற்றும் 2-வது நடைமேடையில் தண்டவாளம் மாற்றுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • ரெயில் மோதி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஆந்திரா மாநிலம் விஜயநகரம் பகுதியை சேர்ந்தவர் அப்பால ராஜூ (33). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் அப்பால ராஜூக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேனாக வேலை கிடைத்து உள்ளது. 2 மாத பயிற்சியை முடித்து கொண்டு கடந்த ஒரு மாதமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கொல்லம்பாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை 5.15 மணி அளவில் ஈரோடு ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை மற்றும் 2-வது நடைமேடையில் தண்டவாளம் மாற்றுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது இருபுறமும் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் அப்பால ராஜூ எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் உடல் துண்டாகி அப்பால ராஜூ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பால ராஜூ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×