search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை, நீலகிரியில் வழக்கம் போல அனைத்து பஸ்களும் இயங்கின
    X

    கோவை, நீலகிரியில் வழக்கம் போல அனைத்து பஸ்களும் இயங்கின

    • மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிறங்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலனை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.

    இதையடுத்து தமிழக அரசு தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு சிரமமின்றி அரசு பஸ்கள் வழக்கம் போல இயக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்து இருந்தது.

    தொழிறங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வந்தாலும் தமிழகத்தில் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. அதன்படி கோவை மாவட்டத்திலும் வழக்கம் போல இன்று பஸ்கள் இயங்கின.

    கோவை மாவட்டத்தில் கோவை உப்பிலிபாளையம், கருமத்தம்பட்டி, அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தலைமை பணிமனை, சுங்கம் 1,2, உக்கடம் 1,2, பொள்ளாச்சி 1,2,3, வால்பாறை என மொத்தம் 17 டெப்போக்கள் உள்ளன.


    இந்த டெப்போக்களில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் மட்டும் 602 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட அனைத்து வெளியூர்களுக்கும் 349 பஸ்கள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் இருந்து 951 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் அறிவித்து இருந்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், காந்திபுரம் மத்திய பஸ் நிலையம், சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின.

    பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்களும் எந்தவித சிரமமும் இன்றி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் என அனைவரும் எந்தவித சிரமமும் இன்றி பஸ்களில் பயணம் செய்தனர்.

    வால்பாறையில் இருந்து அங்குள்ள எஸ்டேட் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு 38 டவுன் பஸ்களும், பொள்ளாச்சி, கோவை, பழனி, சேலம், திருப்பூர், மன்னார்காடு போன்ற பகுதிகளுக்கு 6 பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று காலை வழக்கம் போல பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

    கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் என 43 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 43 பஸ்களும் வழக்கம் போல அதிகாலை முதலே இயங்கின.

    இதேபோல் மேட்டுப்பாளையம் பகுதிகளில் 50 சதவீத பஸ்களும், அன்னூரில் 90 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. காரமடை, சூலூர், சுல்தான்பேட்டை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியதால் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணித்தனர்.

    தொழிற்சங்கங்கள் போராட்டத்தையொட்டி, காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போக்குவரத்து துறையினர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 6 மணி நிலவரப்படிக்கு புறப்பட்ட வேண்டிய 581 பஸ்களும் வழக்கம் போல புறப்பட்டு சென்றன. பஸ்கள் இயங்குவதால் மக்கள் அச்சப்பட வேண்டாம். பஸ் நிலையத்திற்கு வந்து தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாம் என்றனர்.

    நீலகிரி மாவட்டத்திலும் வழக்கம் போல பஸ்கள் இயங்கியது. ஊட்டியில் இருந்து குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளுக்கும், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் வழக்கம் போல பஸ்கள் இயங்கின. இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் இருந்து வழக்கம் போல பஸ்கள் இயங்கியது.

    போராட்டத்தையொட்டி அனைத்து பஸ் நிலையங்கள், பணிமனைகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×