என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்போரூர் அருகே குடிபோதை தகராறில் வியாபாரி அடித்துக்கொலை
- தலைமறைவாக இருந்த சதீஷை திருப்போரூர் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
- போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு வடக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் தேவராஜ் (வயது 55) இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
நேற்று இவருடைய பேத்திக்கு பெயர் வைக்கும் விழா நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் இரவு 10 மணி அளவில் தேவராஜ் மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள மனைப்பிரிவில் தேவராஜ் பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவராஜ் இறந்து போனார்.
இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தேவராஜை கொலை செய்தது அதே பகுதி மடம் தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 28) என்பது தெரிய வந்தது. நேற்று இரவு விழாவுக்கு வந்த சதீஷ் மது அருந்த தேவராஜை அழைத்துச் சென்றுள்ளார்.
அதே பகுதியில் உள்ள தனியார் மனைப்பிரிவு அமைந்துள்ள இடத்துக்கு சென்ற இருவரும் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் சதீஷ் போதை தலைக்கேறிய நிலையில் அங்கிருந்த கல்லால் தேவராஜை தாக்கி கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த சதீஷை திருப்போரூர் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். அவரிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






