என் மலர்
உள்ளூர் செய்திகள்

மெய்யூர் ஒன்றிய கவுன்சிலருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முற்றுகை
- வேல்முருகன் நடுரோட்டில் வழிமறித்து எங்கள் மீது புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம்,மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி(வயது47) ஆவார். இவர் பூண்டி ஒன்றிய 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் மதன்குமார் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சி மன்றத் தேர்தல் காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.
இதனால் தேன்மொழி இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை சரி வர செய்யவில்லை என்று கூறி வேல்முருகன் மற்றும் மதன்குமார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்களாம். இந்நிலையில்,கடந்த 14-ம் தேதி பணி நிமித்தமாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வேல்முருகன் நடுரோட்டில் வழிமறித்து எங்கள் மீது புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.
இந்த சம்பவம் குறித்து 14-ந் தேதி மாலை தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் விரைந்து வந்தார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழியிடம் உறுதி கூறினார். இதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இப்பிரச்சினையால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.






