search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் தம்பி தலைவராக உள்ள தேனி ஆவின் நிர்வாகக்குழு முற்றிலும் கலைப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம் தம்பி தலைவராக உள்ள தேனி ஆவின் நிர்வாகக்குழு முற்றிலும் கலைப்பு

    • தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
    • குழுவின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளது. இதில் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தேனி ஆவினுக்கு 2019ம் ஆண்டு புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

    இவர்கள் பதவிக்காலத்தில் தேனி ஆவினில் துணை மேலாளர், டிரைவர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 38 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனத்தில் கூட்டுறவு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து புதிதாக பணியில் சேர்ந்த 38 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டது. தேனி ஆவின் நிர்வாக சீர்கேடு குறித்து தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு கடந்த மாதம் கூட்டுறவுத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த குழுவின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு வரை உள்ள நிலையில் குழுவை கலைத்து பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் உத்தரவிட்டார். இதனையடுத்து 17 இயக்குனர்கள் மற்றும் 420 பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து ஆவின் செயல்ஆட்சியராக தேனி கலெக்டர் ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    Next Story
    ×