search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுப்பேட்டை அருகே காளி கோவிலில் ஐம்பொன் கரகம் திருட்டு: உண்டியல் பணமும் கொள்ளை
    X

    புதுப்பேட்டை அருகே காளி கோவிலில் ஐம்பொன் கரகம் திருட்டு: உண்டியல் பணமும் கொள்ளை

    • கொள்ளை குறித்து கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் காமாட்சிப்பேட்டையில் ஊருக்கு வெளிப்புற பகுதியில் காளி கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 6 மணிக்கு கோவிலை திறக்க பூசாரி வந்தார்.

    அப்போது கோவில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்து கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கிராம பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் வந்தவுடன் கோவிலுக்குள் உள்ள மற்ற பொருட்கள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இதில் கோவிலுக்கு சொந்தமான ஐம்பொன்னாலான பூங்கரகத்தை காணவில்லை. இது தொடர்பாக கோவில் பூசாரி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின்பேரில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்தனர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கோவிலுக்குள் இருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். கோவிலை சுற்றிவந்த மோப்பநாய், சிறிது தூரம் ஓடி நின்றது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீசார், கோவிலுக்கு வரும் வழிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், நேற்று இரவு முதல் இன்று காலை வரை கோவில் பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த தகவல் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

    Next Story
    ×