என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் டாஸ்மாக் பாரில் புகுந்து சூறை: பிரச்சினைக்குரிய மதுக்கடையை மூட அதிகாரிகள் முடிவு
- மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரியில் உள்ள சுடுகாடு எதிரே டாஸ்மாக் கடை மற்றும் மதுபார் உள்ளது.
இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை அகற்றக்கோரி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ஊழியர்கள் மது விற்பனை செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி மதுபாட்டிகளை மதுக்கடை முன்பு உடைத்தனர். மேலும் அருகில் உள்ள மதுபாருக்குள் புகுந்து அங்கிருந்து மேஜை, நாற்காரிகளை உடைத்து நெறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே ஊழியர்கள் மதுக்கடையை மூடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பெண்கள் மதுபாருக்குள் புகுந்து சூறையாடும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரச்சினைக்குரிய மதுக்கடையை மீண்டும் திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதிமக்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
அந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக சம்பந்த பட்ட அதிகாரிகளுக்கும், மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






